Friday, 13 April 2012

உணவு - நிறைவுப் பகுதி!

உணவு - நிறைவுப் பகுதி!


தண்ணீர் உணவின் இன்றியமையாத ஒரு பகுதி என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் தண்ணீரின் அடிப்படையை இத்தனை நுட்பமாய் பகுத்து தெளிவு கூறியிருக்கின்றனர். நாம் இது வரையில் தண்ணீரின் வகைகளை மட்டுமே பார்த்து வருகிறோம். 
இந்த தண்ணீர் நமது உடலின் செயல்பாட்டில் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை கீழே உள்ள படத்தின் மூலம் அறியலாம். இந்த படம் இணையத்தில் கிடைத்தது ஒன்று. இதை உருவாக்கியவர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை, அவசியம் கருதி அவரது அனுமதியின்றி இங்கே பகிர்கிறேன்.
இன்று தண்ணீரின் கடைசி மூன்று வகைகளைப் பற்றி பார்ப்போம்.

உப்புநீர்

உப்புநீரா னுலவை யுள்ளிலோ டிக்குத்தும்
எய்ப்பசன மாம்பித்த மேறிடுங்காண் - செப்புகின்ற
வாயிலூ றுஞ்சலமு மாதுவர்ப்பா மாதரசே
யோயுங் குடல்வாத மோது.

உப்பு நீரை அருந்துவதால் குடல்வாதம் நீங்குவதுடன், வாயுருத்தல், சாதஞ்செரிப்பு, பித்தம், வாய்நீருறல், துவர்ப்பு ஆகியவை உண்டாகும் என்கிறார்.

சமுத்திரநீர்

கடலின் புனலாற் கவிகை பெருநோய்
உடலின் கடுப்புதிரச் சூலை - படர்குஷ்டம்
வாதகுன்மம் வெப்பிரத்த வாதநீ ராமைம
கோதரம்பலீ கமறுங்கூறு

குன்ம வாயு குடற்கரி யென்பதும்
வன்ம மான மலசல பந்தமுங்
கன்மமாகும் வன்னோய்களுங் காணுமோ
நுன்மை வாரிநீர் காய்ச்சி நுகரினே

கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் தொழு நோய்(பெருநோய்), மகோதரம், உடல்கடுப்பு, உதிரச்சூலை, குஷ்டம், வாத குன்மம், வெப்பம், இரத்தவாதம், மகோதரக்கட்டி, பீலிகம், குன்மவாயு, மலசலபந்தம், வாதநீராமை கன்மத்தாலாகிய நோய்கள், சோணிதவாதம், நடுக்கு வாதம், நாக்கிழுப்பு, பல்லிடுக்கு ரத்தம், ஊனிற்றுவிழல், சந்நிதோஷம் ஆகியவை நீங்கும் என்கிறார். 

இளநீர்

இளநீரால் வாதபித்த மேருமனதுந்
தெளிவாய்த் துவங்குமிருதிஷ்டக் - கொளிவுங்
குளிர்ச்சியு முண்டாகுங் கொடியவனல் நீங்குத்
தளிர்ந்தகன நொய்தாகுஞ் சாற்று

இளநீரை அருந்துவதால் வாதம், பித்தம், அனல், கபம், வாந்தி, பேதி நீரடைப்பும் நீங்குமாம். அத்துடன் மனது தெளிவு, கண்ணொளி தேகக் குளிர்ச்சியும் உண்டாகும் என்கிறார் தேரையர். 
இதுவரை தேரையர் பகுத்துக் கூறிய பதினெட்டு வகையான தண்ணீரின் குண இயல்புகளைப் பார்த்தோம். இந்த நிலையைத் தாண்டி இந்த தண்ணீரை உணவாக, மருந்தாக கொள்ளும் பல முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். எனினும் இந்த தொடரின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி ஒரு இடைவெளிக்கு பின்னர் பிரிதொரு சமயத்தில் இந்த தொடரினை தொடர்கிறேன்.

1 comment:

  1. வள்ளலார் ஞான மூலிகை ::

    வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,
    முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக
    காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

    இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
    தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில்
    மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
    கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில்
    சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.
    இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும்
    அனைத்து நோய்களும் குணமாகும்
    http://sagakalvi.blogspot.in/2011/10/blog-post_04.html

    ReplyDelete