ஒரு சமையல் குறிப்பினை வாசிப்பதற்கும், அதனை ருசியோடு சமைத்தெடுப்பதற்குமான
இடைவெளியில் அனுபவம் என்கிற ஒன்று தேவைப் படுகிறது. அந்த வகையில் இங்கே
பகிரப் படும் தகவல் பகிர்வுகள் யாவும் ஒரு சமையல் குறிப்பின்
தரத்திலானவையே, அதனை செயல்படுத்தி பலனடைய விரும்புகிறவர்கள் முறையான
வழிகாட்டுதலோடு மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
முந்தைய குண்டலினி பதிவில் "இடகலை", "பிங்கலை", "சுழுமுனை" என மூன்று முக்கியமான நாடிகளை பார்த்தோம். இவை மூன்றும் சுவாச ஓட்டத்தின் பெயர்களே!
மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை
எனப்படுகிறது. இதற்கு "சந்திரகலை" என்றொரு பெயரும் உண்டு. மூக்கின் வலது
நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை
என்றொரு பெயரும் உண்டு.
இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.
இதையே சர ஓட்டம் என்பர். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத்
தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில்
மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.
இந்த சுவாச நடை தொடர் இடைவெளிகளில் மாறும் தன்மை உடையது என சித்தர்
பெருமக்கள் கூறுகின்றனர். அதாவது ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக்
கிழமைகளில் சூரியகலை அல்லது பிங்கலை அல்லது வலது நாசியில் சுவாசம் நடைபெற
வேண்டுமாம். அதைப் போலவே திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சந்திரகலை
அல்லது இடகலை அல்லது இடது நாசியில் சுவாசம் நடை வேண்டுமாம்.
வளர் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் இடகலையும், தேய் பிறையில் வரும்
வியாழக் கிழமைகளில் பிங்கலை சுவாசமும் நடக்க வேண்டும் என்கின்றனர். இதன்படி
சுவாசம் நடைபெற்று வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்குமாம். இதில் ஏதேனும்
மாறுதல் வரும் போது உடல்நலம் கெடுகிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
திங்கள், புதன், வெள்ளிக் கிழமையில் ஓடவேண்டிய இடகலை சுவாசத்திற்கு பதிலாக
பிங் கலை சுவாசம் ஓடினால் முறையே ஜலதோஷம், தலைவலி, கண், காது நோய்கள்
உண்டாகுமாம்.
ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் ஓட வேண்டிய பிங்கலை
சுவாசத்திற்கு பதில் இடகலை சுவாசம் ஓடினால் முறையே இருமல், காய்ச்சல்
மற்றும் உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு உண்டாகுமாம்.
இதன் அடிப்படையில்தான் வைத்தியர்கள் மருந்தினை தீர்மானிக்கும் முறை கூட
இருந்தது. மருத்துவம் என்றில்லாமல் வாழ்வின் பிற செயல்களும் இந்த சர
ஓட்டத்தினை வைத்தே தீர்மானிக்கப் பட்டது. இதனையே சரம் பார்த்தல் என
கூறுவர். சரம் பார்த்தல் என்பது முற்காலத்தில் ஒரு வாழ்வியல் கூறாகவே
இருந்திருக்கிறது. காலவோட்டத்தில் நாம் மறந்தே விட்டோம் என்பது வருத்தமான
ஒன்று.
No comments:
Post a Comment