Friday 13 April 2012

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்.

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்.


தண்ணீரை சித்தர் பெருமக்கள் பதினெட்டாக பிரித்துக் கூறியதையும், அவை ஒவ்வொன்றும் உடலியல் ரீதியாக நமக்கு எவ்விதமான பலன்களைத் தருகிறது என்பதைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று குளத்து நீர், ஏரிநீர், சுனைநீர், ஓடைநீர், கிணற்று நீர் பற்றி பார்ப்போம். இங்கே பகிரப் படும் தகவல்கள் யாவும் தேரையர் அருளிய “பதார்த்த குண சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து சேகரிக்கப் பட்டவை.

குளத்துநீர்

குளத்துநீர் தானே கொடிதான வாதம்
வளர்த்திவிடு மப்பான் மதுவாங் - குளிர்ச்சியையு
மெத்தவுண் டாக்குமென மேதினியோர் தங்களுக்குக்
கொத்தலரும் பூங்குழலால் கூறு.

தண்டா மரைக்குளத்திற் றங்கு புனலதனால்
உண்டாகும் வாதபித்த முண்மையே - பண்டான
வெக்கையோய் மாறாது வீறுந் தவனமுமா 
மைக்கருங்கண் மாதே வழுத்து

அல்லிக் குளத்தினீ ரக்கினிமந் தப்பேதி
மெல்லச் சொறிசிரங்கு வெப்புடனே - தொல்லுலகில்
தாலுதனி லட்சரமுந் தாதுநஷ்ட முங்கொடுக்குங்
கோல மலர்த்திருவே கூறு

குளத்து நீர் என பொதுவாகச் சொன்னாலும் அதிலும் வேறுபாடுகள் இருப்பதாக கூறுகிறார். குளத்தில் வாழும் நீர்த் தாவரங்களைப் பொறுத்து அந்த குளத்து நீரின் குண இயல்புகள் மாறுபடுமாம். தாமரை அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீரால் வாதம், பித்தம், வெக்கைநோய், தாகமும் உணடாகுமாம். அல்லி அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீரால் அக்கினி, மந்தபேதி, சொறிசிரங்கு, வெப்பு, நாவிலச்சரம், தாதுநஷ்டமும் உண்டாகுமாம் இதனால் குளத்து நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். 
பொதுவில் குளத்து நீரை பருகி வந்தால் வாதம், மதுமோகம், குளிர்ச்சி ஆகியவற்றை அதிகம் உண்டாகும் என்கிறார். தேரையரின் தனித்துவமான இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆராயப் படுதல் அவசியம். 

ஏரிநீர்,சுனைநீர்

ஏரிநீர் வாதமிளைத்த துவர்ப்பாகுங்
கூரியதோர் கற்சுனைநீர் கூறுங்காற் - சிரியதோர்
வாதமொடு பித்தமெழும் வைத்தொருநாட்பின்னுண்ணிற்
சீதமில்லை யுட்டினமாஞ் செப்பு.

சுனைப்புனலைத் துய்த்தார்க்குஞ் சூழ்ந்ததிற்றோய்ந்தோர்க்குங்
களைப்புறுசீ தச்சுரமுங்காணும் - வினைக்குரிய
வாதமுறுகத் தால்வருமே நடுக்கலின்னும்
ஓதுபித்த கோபமுமா முன்னு.

ஏரி நீர் வாதத்தையும் துவர்ப்பையும் உண்டாக்குமாம். கற்கள் நிறைந்த சுனை நீரானது வாதத்தையும் பித்தத்தையும் உண்டாக்குமாம். ஆனால் அந்த சுனை நீரை ஒருநாள் வைத்திருந்து அருந்தினால் எந்த கெடுதலும் செய்யாது ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும் என்கிறார் தேரையர்.

ஓடைநீர்

ஓடை தருநீரை யுண்ணவதி தாகமுமா
மேடையெனத் தோட்பலனு மெத்தவா மோடைமலர்க்
கண்ணா யதுதுவர்ப்புங் காணாமதுரமுமாம்
எந்நாளும் பாரி லியம்பு.

ஓடை நீர் சுவையின் அடிப்படையில் இரண்டாக பிரித்து கூறப் படுகிறது. ஒன்று துவர்ப்புச் சுவையுடைய நீர், மற்றயது இனிப்புச் சுவையுடைய நீர். இந்த இருவகை நீரில் எதை அருந்தினாலும் தாகமும் பலமும் அதிக அளவில் ஏற்படும் என்கிறார் தேரையர்.
கிணற்று நீர்

ஆசாரக் கூபத் தறலா லதிதாகம்
வீசாகச் சூடுபசி மெய்க்காந்தன் - மாசூலை
மெய்யுள்வலி சந்துளைப்பு வீழ்மயக்கஞ் சோபைபித்தம்
பையவரும் மீளையறும் பார்.

கிணறு தோண்டப்படும் நில வளத்தை பொறுத்து கிணற்று நீரை இரு வகையாக பிரிக்கலாம் என்கிறார். ஒன்று உவர் நீர் கிணறுகள், மற்றயது நன்னீர் கிணறுகள். இதில் எந்த வகை நீரை அருந்தினாலும் தாகம், சூலை, சூடி போன்றவை நீங்கி உடலில் வலு உண்டாகுமாம். அத்துடன் சிலேத்துமம், வாதம், மயக்கம், சோபை, பித்தம் ஆகியவையும் நீங்கும் என்கிறார் தேரையர். 
அறிவியல் பெரிதாக வளர்ச்சியடையாத ஒரு காலகட்டத்தில் நமது முன்னோர்கள் நாம் அருந்தும் தண்ணீரிலும் இத்தனை தெளிவுகளை ஆய்ந்தறிந்து அவற்றை நூலாக்கி வைத்திருக்கின்றனர். இவற்றை பயன் படுத்தாமல் அல்லது மேம்படுத்தாமல் போனது நமது தவறே.... இனியாகிலும் இவற்றின் அருமை பெருமைகளை உணர்வதோடு ஆர்வமுள்ளவர்களுக்கு பகிர்வதன் மூலம் நமது முன்னோர்களின் பெருமையை உலகறியச் செய்திட உறுதியேற்க வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment