உணவை சமைத்து உண்ண துவங்கிய பின்னரே சுவையின் முக்கியத்துவம் முன்னிறுத்தப்
பட்டது. நமது முன்னோர்கள் உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு,
இனிப்பு என ஆறு வகையான சுவைகளை வரையறுத்திருக்கின்றனர். இன்றும் கூட
அறுசுவை உணவு என்கிற பதம் நம் புழக்கத்தில் இருந்து வருகிறது. முழுமையான சரிவிகித உணவை அறுசுவை உணவு என்பதாகவும் வலியுறுத்தினர். இன்று நம்முடைய அன்றாட உணவில் இந்த ஆறு சுவைகளும் இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழி, சுவையின் மகத்துவத்தை
நமக்கு உணர்த்துவதாகவே கருதலாம். நமது உணவில் இந்த சுவைகள் சரியான
விகிதங்களில் இல்லாமலோ அல்லது ஏதேனும் ஒரு சுவை மட்டும் அதிகரிக்கும்
பட்சத்தில் அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கும். குறிப்பிட்ட சுவையை
முற்றிலுமாய் தவிர்த்தால் அது உடலில் குறைபாடுகளை உண்டாக்குமாம். எனவே
எல்லா சுவையும் நமது உணவில் சரியான விகிதத்தில் இருக்குமாறு பார்த்துக்
கொள்வது அவசியம்.
இந்த சுவைகளை எப்படி சுவைப்பது?
நமது முன்னோர்கள் உணவினை சுவைக்கும் வழிமுறைகளை தெளிவாகவே சொல்லியிருக்கின்றனர். அவற்றை இந்த தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன்.
இனி இந்த சுவைகள் நமது வாழ்வில் என்னவெல்லாம் செய்கிறதென பார்ப்போம்.
சுவைகளின் விகிதங்களைப் பொறுத்து உணவை மூன்று பிரிவாக, மூன்று குணமுடைய உணவுகளாக வகைப் படுத்தி இருக்கின்றனர். அவை.. “சாத்வீக உணவு”, “ராஜோ உணவு”, “தாமச உணவு” என்பதாகும்.
இந்த மூன்று வகை உணவுகளின் அடிப்படையில் மனிதர்களின் குண நலன்கள் மாறு படுகின்றன. சாத்வீக வகை உணவுகள் அமைதியான குணநலனையும், ராஜோ வகை உணவுகள் ஆர்ப்பரிப்பான குண நலனையும், தாமச வகை உணவுகள் அழிவினை உண்டாக்கும் குண நலனையும் நல்குமாம். பஞ்சபூதக் கலவையான நமது உடலின் ஐம்புலன்களின் செயல்பாட்டினை நெறிப்படுத்தும் உணவுதான் நமது குண நலன்களையும் தீர்மானிக்கின்றன என்றால் ஆச்சர்யம்தானே!
No comments:
Post a Comment