நமது உடலையும், உயிரையும் பிணைத்திருப்பதும், அவற்றை வளர்த்தெடுப்பதும் சுவாசம் என்றால் அது மிகையில்லை. மனித உடலில் உற்பத்தியாகும் 60-80 விழுக்காடு கழிவுகள் சுவாசத்தின் வழியேதான் வெளியேறுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திராத தகவல்.
இந்த தகவலை நவீன அறிவியலும் உறுதி செய்கிறது. நமது முன்னோர்கள் அறிவியல்
வளராத ஒரு காலகட்டத்தில் சுவாசத்தின் அருமை பெருமைகள் உணர்ந்து தெளிந்து
அதனை நெறிப் படுத்தும் ஒரு கலையினை காலம் காலமாய்
வளர்த்தெடுத்திருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் ஆச்சர்யமும், பெருமிதமும்
கொள்ளக் கூடிய ஒன்று.
பிறந்த கணத்தில் இருந்து கடைசி மூச்சு வரையிலும் தொடர்ச்சியான வினைகளினால்
ஆனதே நம் வாழ்க்கை. வினைகளும், அதன் எதிர் வினைகளுமே ஒருவரின் வாழ்க்கையை
முன்னெடுத்துச் செல்கின்றன. இதனை நல்வினை, தீய வினை என பொதுவில்
பகுத்தாலும்... இவற்றை உருவாக்குவதும், அதில் உழல்வதும் நமது மனமே!,
உடலுக்கு ஆற்றல் தர ரத்தம் ஓடுவதைப் போல, உள்ளத்துக்கு ஆற்றல் தருகிறவை
எண்ணங்கள்.
இந்த எண்ணங்களை இந்திய வேத மரபு சம்ஸ்காரங்கள் என்கிறது. இவற்றை அழிப்பதே
ஞானத்தின் உயர்நிலை. இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றி அதை
வலுவேற்றுகிற சுவாசம்,
நமது எண்ணங்களையும் சீர்படுத்தி, தேவயற்றவைகளை அழித்து மனதை
மேம்படுத்துகிறதென நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். இதனை "துக்க
நிவர்த்தி" என்கின்றனர்.
ஆச்சர்யமான தகவல்தானே.....
அமைதியான மன நிலையில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது, அதே நேரத்தில் துக்கம், பதட்டம், கொண்டாட்டம் போன்ற மன நிலைகளில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது என்பதை இதுவரை கவனிக்கா விட்டாலும், இனி கவனித்துப் பாருங்கள்.
ஆம், சுவாசத்தின் துணை கொண்டு நமது எண்ணங்களையும் தூய்மை செய்திட முடியும்
என்பதை நமது முன்னோர்கள் நிரூபித்திருக்கின்றனர். அத்தகைய வழி முறைகளை இந்த
தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்நேரத்திற்கு உங்களுக்குள் ஒரு கேள்வி வந்திருக்கக் கூடும். அது,
மூக்கினால் மட்டும்தான் சுவாசிக்க முடியுமா?, வாயினால் கூட சுவாசிக்கலாமே!,
அது பற்றிய தகவல் ஏதும் இருக்கிறதா என்கிற கேள்விகள் வந்திருக்கும்.
No comments:
Post a Comment