Friday, 13 April 2012

உணவு - எத்தனை சாப்பாடு?, எப்போது சாப்பிடுவது?

உணவு - எத்தனை சாப்பாடு?, எப்போது சாப்பிடுவது?


பழந்தமிழரும், உணவும் என்கிற இந்த நெடுந்தொடரில் இதுவரையில் உணவின் வரலாறு, தன்மை, சுவை, குணநலன்கள் அவை மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவைகளைப் பார்த்தோம். உணவை எப்படி உட்கொள்வது, எந்த சமயத்தில் உட்கொள்வது, எந்த வகையான உணவுகளை உட்கொள்வது, உணவையே மருந்தாகவும், மருந்தையே உணவாகவும் கொள்ளுதல் என பல பரிமாணங்களை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர்.

அன்னிய மொழி மற்றும் இனத்தாரின் பாதிப்புகள் நமது வாழ்வில் ஊடுறுவும் வரையில் இந்த வாழ்வியல் நியதிகளை நமது முன்னோர்கள் தீவிரமாய் கடைபிடித்தே வந்தனர். 
தற்போதைய உலகமயமாக்கல் கலாச்சாரத்தில் நமது வேர்களை நாம் மறந்து போய்விட்டோம் என்பது வருந்தத்தக்கது. அந்த வகையில் மறைந்து போன சில நியதிகளை இனிவரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் ஒரு நாளைக்கு எத்தனை தடவை உணவை உட்கொள்ளுதல் வேண்டும், எந்த சமயத்தில் உட்கொள்ள வேண்டும் என்கிற தகவலை இன்று பார்ப்போம்.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு போதுமானது என்கிறார் தேரையர். தனது "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் இதனை பின் வருமாறு விளக்குகிறார்.

தன்மமி ரண்டேயூண் டப்பிமுக்காற் கொள்ளினினன்
சின்மதலை காளைகடல் சேர்பருவ-தன்மூகுர்த்த
மொன்றுக்கு ணானகுக்கு ளோதுமிரண் டுக்குளுண்பர்
நன்றுக்குத் தீயோர் நயந்து

ஒரு நாளில் இரண்டு வேளைகள் உண்பதே நன்மையளிக்கும். அதற்குமேல் மூன்றாவது காலம் உணவு உண்ன வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாளின் முதலாவது உணவை சூரிய உதய நேரத்திலிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும், இரண்டாவது உணவை சூரிய உதயத்தில் இருந்து ஆறு மணி நேரத்திற்குள்ளும், மூன்றாவது உணவை சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்குள்ள்ம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இந்த கால முறை தவறி உண்டால் உடலுக்கு தீமை உண்டாகும் என்கிறார்.

என்ன தீமை விளையும்?

மூன்றுநான் காறெண்மு கூர்த்தங் களின்முறையே
ஞான்றுளுண்ணு மந்த நறுமுணவே-தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோகமுயிர்க் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்.

சூரியன் உதய நேரத்திலிருந்து நான்கு மணி நேரதில் உண்ணும் உணவினால் உடலுக்கு மிதமான நோய் ஏற்படுமாம். சூரியன் உதய நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் உண்ணும் உணவினால் நோய்கள் உண்டாகுமாம்,  மாலையில் சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் உண்ணும் உணவினால் உயிருக்கு தீங்கு விளையும் என்கிறார்.
தேரையரின் இந்த தெளிவுகளுக்கு பின்னே இருக்கும் அறிவியல் தன்மைகள் ஆய்வுக்குறியவை. எனினும் நமது முன்னோர்கள் இதனை கடைபிடித்து நோயற்ற வாழ்வு வாழ்ந்திருந்தனர் என்பது மட்டும் உண்மை.

No comments:

Post a Comment