Friday 13 April 2012

உணவு - மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர்.

உணவு - மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர்.


நமது முன்னோர்கள் தண்ணீரை மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர், குளத்துநீர், ஏரிநீர், சுனைநீர், ஓடைநீர், கிணற்று நீர், ஊற்றுநீர், பாறைநீர், அருவிநீர், அடவிநீர், வயல்நீர், நண்டுக்குழி நீர், உப்புநீர், சமுத்திரநீர், இளநீர் என பதினெட்டு வகைகளாய் பிரித்துக் கூறியதை நேற்றைய பதிவில் பார்த்தோம். 
இன்றைய பதிவில் முதல் நான்கு வகைகளான மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்று நீர் பற்றிய தேரையரின் தெளிவுகளை பார்ப்போம். இந்த பதிவில் பகிரப்படும் தகவல்கள் யாவும் “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

மழைநீர்

சீதமுறுங் குளிர்ச்சி சேருமே சித்தத்துட
போதந் தெளிவாய்ப் பொருந்துங்கா ணாதமோடு
விந்தும் வளர்ந்துவரு மேதினியி லெவ்வுயிர்க்குஞ்
சிந்துமழை நீராற் றெளி.

மழை நீரை தேரையர் மிக உயர்வாகச் சொல்கிறார். இந்த மழை நிரினால்தான் உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் உயிர்ச்சத்து கிடைக்கிறது என்கிறார். இத்தகைய சிறப்பான மழை நீரை சேமித்து வடிகட்டி அருந்த வேண்டுமாம். இப்படி தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் உஷ்ணம் நீங்கி, அறிவு விருத்தியும் தெளிவும் உண்டாகும் என்கிறார்.

ஆலங்கட்டி நீர்

வெண்மாசி மேகமுடன் வீறும் பெரும்பாடு
கண்மாசிகாந்தல் கடிதகற்றுந் - தண்மீறும்
விற்கற் சுவாசமுடன் மெய்ம்மயக்க முன்போக்குங்
கக்குமா லாங்கட்டி காண்.

சில நேரங்களில் மழை பெய்யும் போது வானில் இருந்து பெரிய அளவிலான பனிக் கட்டிகள் விழுவதை பார்த்திருக்கலாம் இவையே ஆலங்கட்டிகள் என்று அழைக்கப்படும். இந்த ஆலங்கட்டி நீரை சேமித்துவைத்து அருந்துவதால் மேகம்,  பெரும்பாடு, கண்மாசி, காந்தல், விக்கல், சுவாச நோய்கள், மெய்மயக்கம் ஆகியவை நீங்கும் என்கிறார் தேரையர்.

பனிநீர்

பனிச்சலத்தை யெல்லுதயம் பாணஞ்செய் வாரைத்
தனிச்சொறிசி ரங்குகுட்டந் தாபந் - தொனிக்கயங்கால்
முத்தோஷி நீரிழிவு மூடழல்கி ராணியிவை
கொத்தோடு தாழ்ந்தகலுங் கூறு.

பனிநீர் என்பது அதிகாலை வேளையில் வெளியான இடதில் ஒரு பாத்திரத்தை வைப்பதன் மூலம் சேகரிக்கப்படும் நீர். இந்த நீரை சேகரித்த உடன் அருந்த வேண்டுமாம். காலம் தாழ்த்தி அருந்தக் கூடாதாம். இப்படி தொடர்ந்து காலையில் பனி நீரை அருந்தி வருவதால் சொறி, சிரங்கு, குஷ்டம், தாபம், சயம், வாய்வு, முத்தோஷம், நீரிழிவு, அழல் கிராணி ஆகிய நோய்கள் நீங்கும் என்கிறார்.
தற்போது நீரழிவு நோயினால் எல்லா வயதினரும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்த வேளையில் தேரையரின் இந்த குறிப்பு மகத்தானது. இது தொடர்பாக மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டால் பல புதிய கூறுகள் புலப்படலாம்.
ஆற்றுநீர் 

ஆற்றுநீர் வாத மனலங் கபத்தோடு
தோற்றுகின்ற தாகந் தொலைக்குமே - ஊற்றமிகுந்
தேகத்தி னோயையெல்லாஞ் சீறித் துரத்திவிடும்
போகத்திற் றாதுவுமாம் போற்று.

ஒவ்வொரு ஆற்று நீருக்கும் தனித்துவமான ஒவ்வொரு குணம் இருப்பதாகவும், அவற்றை தொடர்ந்து பருகுவதாலும் அவற்றில் குளிப்பதாலும் உடலுக்கு குறிப்பிடத் தக்க நன்மைகள் கிடைக்கும் என்கிறார். எனினும் பொதுவில் ஆற்று நீரை பருகிவந்தால் வாதம், அனல், கபம், தாகம், எல்லா நோய்களும் தீருமாம். மேலும் தவிர தாது விருத்தியும் உண்டாகுமம் என்கிறார் தேரையர். 

No comments:

Post a Comment