மூச்சுக் கலையின் நுட்பங்களை அலசுவதற்கு முன்னர், மூக்கின் வழியே சென்று
வரும் காற்று நமது உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அறிவது அவசியம்.
இந்த அடிப்படைகளை புரிந்து கொண்டால் மட்டுமே மூச்சுக் கலையின் அறிவியலை,
அதன் நுட்பத்தை உணர முடியும்.
மூக்கின் வழியே உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள சிறு துகள்கள் மூக்கின்
உட்புறம் இருக்கும் நுண்ணிய ரோமங்களினால் வடிகட்டப்படுகிறது. இந்த நிலையில்
மூக்கினுள் இருக்கும் திசுக்கள் காற்றை வெதுவெதுப்பாக்கி குரல்வளை எனும்
குழாய் பகுதிக்கு அனுப்புகிறது.
குரல்வளையின் ஊடே செல்லும் காற்று கீழிறங்கி மூச்சுக் குழாய்களுக்குள்
செல்கிறது. இந்த மூச்சுக் குழாய்கள் ஆறுகள் பிரிவதைப் போல பல்லாயிரம், பல
லட்சம் கிளை குழாய்களாய் பிரிந்து நுரையீரலுக்குள் செல்கிறது.
அதென்ன நுரையீரல்....
நுரையீரல் என்பது நமது மார்பகத்தின் இரண்டு பக்கத்திலும் அமைந்திரும் பெரிய
காற்றுப் பைகள் என்று சொல்லலாம். கீழே உள்ள படத்தில் இருக்கும்
உறுப்புதான் நுரையீரல்.
இது சுருங்கி விரியும் தன்மையுடைய தசையால் அமையப் பெற்றது இதன் உள்ளே
கோடிக் கணக்கான நுண்ணிய காற்றறைகள் உள்ளது. மூச்சுக் குழாய்கள் வழியே
செல்லும் காற்றானது இந்த காற்றறைகளில் நிரம்பி சுழன்று கொண்டிருக்கும்.
எல்லாம் சரிதான்!, நுரையீரல் இந்த காற்றை வைத்துக் கொண்டு என்ன செய்கிறது?
இந்த இடத்தில், இதயம் பற்றியும், இரத்த ஓட்டம் பற்றியும் சுருக்கமாய்
பார்ப்பது அவசியமாகிறது. நமது உச்சந்தலை முதல், உள்ளங்கால் வரை நீக்கமற
நிரம்பியிருக்கும் பல லட்சம் மெல்லிய குழாய்களின் வழியே இரத்தமானது
தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.
இந்த இரத்தமே நமது உடலின் அத்தனை உறுப்புகளின் இயக்கம் மற்றும்
செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இந்த இரத்த ஓட்டம்
முழுவதையும் இதயம் கட்டுப் படுத்துகிறது. அதாவது இதயத்தில் இருந்து கிளம்பி
மீண்டும் இதயத்திற்கே வந்து சேரும் வகையில் இரத்த ஓட்டம்
அமைந்திருக்கிறது.
தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இரத்தமானது உறுப்புகளுக்குத் தேவையான ஜீவ
சக்தியை கொடுத்துவிட்டு, அவற்றின் கழிவுகளை சுமந்து கொண்டு இதயத்திற்கு
திரும்பி வருகிறது. கழிவுகளை சுமந்து வரும் இந்த இரத்தத்தை சுத்திகரிக்கும்
பொருட்டு நுரையீரலில் உள்ள கோடிக் கணக்கான காற்றுப் பைகளுக்கு மெல்லிய
தந்துகி குழாய்களின் மூலம் அனுப்புகிறது.
நுரையீரலில் நாம் முன்னரே பார்த்த நுண்ணிய காற்றுப் பைகளில் இந்த இரத்தம்
நிரம்பும் போது நுரையீரலானது, இரத்தத்தில் இருக்கும் கழிவுகளையும், கரியமில
வாயுவையும் பிரித்து எடுத்துவிட்டு, காற்றுப் பைகளில் நிரம்பியிருக்கும்
காற்றில் உள்ளப்ராண சக்தி எனப்படும் ஆக்சிஜனை இரத்தத்தில் நிரப்பி மீண்டும்
இதயத்திற்கு அனுப்புகிறது.
இந்த நிலையில் இரத்தத்தில் கழிவாய் வந்த கரியமில வாயுவை சுமந்து கொண்டு
மூச்சுக் காற்று முதலில் சொன்ன சுவாசக் குழாய்களின் வழியே மீண்டு குரல்வளை
வழியே மேலேறி மூக்கின் வழியே வெளியேறுகிறது.
காற்றை உள்ளிழுத்தல், உள் நிறுத்துதல், வெளியேற்றுதல் என்கிற இந்த மூன்று
நிகழ்வுகளின் பின்னே நமது உடலில் இத்தனை பெரிய வேலை தொடர்ந்து நடந்து
கொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment