Friday, 13 April 2012

மூச்சுக் கலை - சுவாசித்தலின் வகைகள்

மூச்சுக் கலை - சுவாசித்தலின் வகைகள்


நமது உடற்கூறானது எலும்புகளின் மீதே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. எலும்புகளின் மேலே தசைகளும், இரத்த நாளங்கள் விரவி இருப்பதைப் போலவே, எலும்புச் சட்டகத்தின் உள்ளே முக்கியமான உள்ளுறுப்புகள் அமைந்திருக்கின்றன. இந்த எலும்புகள் யாவும் ஒன்றோடு ஒன்று தசைகளினாலும், நரம்புக்ளினாலும் பின்னிப் பிணையப் பட்டிருக்கின்றன. 
மேலே உள்ள படத்தில் மார்புக் கூட்டையும் அதனுள் பொருந்தியிருக்கும் நுரையீரலையும் காணலாம். நுரையீரலின் வெளிச்சுவர், மேலே கழுத்தெலும்புடனும், சுற்றிவர நெஞ்சுக்கூடு மற்றும் விலா எலும்புகளுடனும், கீழ் பகுதி உதரவிதானத்தோடு ஒட்டியிருப்பதைக் காணலாம். நமது நுரையீரல் விரிவடைவதையும், சுருங்குவதையும் இந்த பக்க உறுப்புகளே தீர்மானிக்கின்றன.
நம் நுரையீரலில் காற்று நிரம்புவதைப் பொறுத்து உயர் சுவாசித்தல், மத்திம சுவாசித்தல், கீழ் சுவாசித்தல், முழுமையான சுவாசித்தல் என நான்கு வகையான சுவாச முறைகள் இருப்பதாக பிரித்திருக்கின்றனர். இவற்றில் நாம் எந்த முறையில் சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை அறிய பின் வரும் விளக்கங்கள் உதவும்.
உயர் சுவாசித்தல் என்பதை கழுத்தெலும்பு சுவாசித்தல் எனக் கூறுவர். இந்த முறையில் விலா எலும்புகள், கழுத்தெலும்பு போன்றவைகளை மேலே உயர்த்துவதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்து காற்றினை உள்ளே இழுக்கும் முறை. இந்த முறையில் நிறைய உறுப்புகளை சிரமப் படுத்தி, குறைந்த அளவு காற்றையே நுரையீரலில் நிரப்புகிறோம். இன்னும் குறிப்பாக சொல்வதானால் நுரையீரலின் மேற்பகுதியில் மட்டுமே காற்று நிரம்புகிறது. பயனற்ற இம் முறையை தவிர்த்தல் வேண்டும்.
மத்திம சுவாசித்தல் என்பது விலா எலும்புகளை உயர்த்தி இயக்குவதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்வதாகும். இந்த முறையில் காற்று நுரையீரலின் மேல் மற்றும் மத்திய பகுதியில் மட்டுமே நிரம்பும். இதுவும் அத்தனை சிறப்பான சுவாச முறை இல்லை.
கீழ் சுவாசித்தல் அல்லது ஆழ்ந்த சுவாசித்தல் என்பது முதல் இரண்டு முறைகளை விடவும் மேம்பட்ட ஒன்று. இந்த முறையில் நமது நுரையீரலின் மேல், மத்திய மற்றும் கீழ் பகுதிகளில் காற்று நிரம்புகிறது. இதில் மார்புக் கூடு, உதரவிதானம், விலா எலும்புகள் ஆகியவை ஒத்திசைவுடன் இயங்குவதால் நிகழ்கிறது. சுவாச பயிற்சி செய்யும் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இந்த நிலையை அடைய வேண்டி பயிற்சிகளை செய்யலாம்.
முழுமையான சுவாசித்தல் அல்லது யோகிகளின் சுவாசித்தல் என்பது சுவாசப் பயிற்சியின் உயர்நிலை. இந்த முறையில் நுரையீரலை முழுமையாக விரிவடையச் செய்வதன் மூலம் அதன் முழுக் கொள்ளளவுக்கு காற்றை நிரப்பி, அதில் இருக்கும் பிராண சக்தியை முழுமையாக பிரித்தெடுத்து இரத்தத்தில் கலக்கச் செய்வதாகும். இது முறையான தொடர் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.
நம்மில் பெரும்பாலானவர்கள் முதல் இரண்டு வகை சுவாசக்காரர்களே! இதை உணர்ந்து சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டால் நம் உடலையும், உயிரையும் மேம்படுத்தி நல் வாழ்வு வாழ்ந்திடலாம்.

No comments:

Post a Comment