ஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள்
நிறுத்தி, வெளியிடுகிறோம். ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த
பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது. இவை எல்லாம் இயல்பு
நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.
ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த
அளவு மாறுபடும். உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும்,
உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.
அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான சுவாசம் செய்வதில்லை
என்பதுதான் உண்மை. நமது நுரையீரலின் கொள்ளளவில் முப்பது விழுக்காடு
மட்டுமே காற்றை உள்ளிழுத்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறது
ஆய்வுகள். இதனால் என்னவெல்லாம் எதிர் விளைவுகள் உண்டாகிறது என்பதை தெரிந்து
கொண்டாலே மூச்சுக் கலையின் மகத்துவத்தை உணரமுடியும்.
குறைவான சுவாசத்தினால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் போதுமான அளவு
காற்று நிரம்பிட வாய்ப்பில்லாமல் போகிறது. இதன் காரணத்தினால் நுரையீரல்
தனது செயல்பாட்டினை முழுமையாக செய்ய முடியாமல் போவதால் இரத்ததில் உள்ள
கழிவுகள் முழுமையாக நீக்கப் படாமலும், குறைவான பிராண வாயுவையும் சுமந்து
கொண்டு மீண்டும் உடலினுள் பாய்கிறது.
இப்படி கழிவுகளை சுமந்து கொண்டு செல்லும் இரத்தத்தினால், அது உடலில் செய்ய
வேண்டிய பணிகளை முழுமையாக செய்ய முடியாமல் போகிறது. இதன் தாக்கம் எல்லா
உறுப்புகளின் செயல்பாடுகளிலும் கணிசமான பாதிப்பினை உண்டாக்குகிறது.
இதன் தாக்கம் மூளையின் செயல்பாட்டினை மந்தமாக்குவதில் துவங்குகிறது. நாம்
உட் கொள்ளும் உணவை முழுமையாக ஜீரணிக்க முடியாமல், அதில் உள்ள சத்துக்களை
பிரித்தெடுப்பதில் குறைபாடுகள் உண்டாகிறது. இதனால் உறுப்புகளின்
செயல்பாடுகள் குறைவதனால் உடலின் கழிவுகள் வெளியேறாமல் தேங்கி நோய்
உண்டாக்குவது வரை நீள்கிறது.
"வெறும் மூச்சுதானே", என நாம் அசட்டையாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு
செயலுக்குப் பின்னால் எத்தனை பெரிய பாதிப்புகள் காத்திருக்கிறது என்பதை
உணர்த்திட வேண்டியே இத்தனை நீண்ட அறிமுகம் தேவையாகிறது. இந்த பாதிப்புகளை
நம் மூச்சினை சீர் படுத்துவதன் மூலம் எளிதில் சரி செய்யும்
வாய்ப்பிருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
இனி வரும் பதிவுகளில் மூச்சுக் கலையின் அறிவியல் அதனை கை கொள்ளுதல், மேம்படுத்துதல் போன்றவைகளைப் பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் முதலில் நாம் எப்படி சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை
அறிதல் அவசியம். ஆய்வுகளின் அடிப்படையில் நான்கு விதமான சுவாசத்தினை நாம்
மேற்கொண்டிருக்கிறோம் என பட்டியலிட்டிருக்கின்றனர்.
அவை...
உயர் சுவாசித்தல்
மத்திம சுவாசித்தல்
கீழ் சுவாசித்தல்
முழுமையான சுவாசித்தல்
No comments:
Post a Comment