நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
வள்ளுவரின் இந்த வாக்கு, நம் முன்னோர்கள் நீரின் மகத்துவத்தினை எந்த
அளவிற்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கான சான்று. நவீன அறிவியல் தெளிவுகளின்
படி உலகில் இருக்கும் மொத்த நீரில் மூன்று விழுக்காடு நீர்தான் சுத்தமானது,
என்றும் அதில் இரண்டு விழுக்காடு பனிக் கட்டியாகவும், மீதமிருக்கும் ஒரு
விழுக்காடே நாம் அனைவரும் பயன்படுத்துவதாகவும் இருப்பதாகக் கூறுகிறது. எனவே
தண்ணீரை வீணாக்கிடாமல் பயன் படுத்திட நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டியது
அவசியம். இதனை இங்கே குறிப்பிடக் காரணம் இன்று உலக தண்ணீர் தினமாக அனுசரிக்கப் படுகிறது.
நம் முன்னோர்கள் வகுத்த பதினெட்டு வகையான தண்ணீரில் இன்று ஊற்றுநீர்,
பாறைநீர்,அருவிநீர், அடவிநீர், வயல்நீர், நண்டுக்குழி நீர் ஆகியவற்றின் குண இயல்புகளை பார்ப்போம். இவை யாவும் தேரையர் அருளிய “பதார்த்த குண சிந்தாமணி” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
ஊற்றுநீர் பித்தமொழிக்கு மினிப்பாகும்
ஆற்றிவிடுந் தாகத்தை யப்பொழுதே - கூற்றுவிழிக்
கொம்ப ரிடையாய் குணாகுணங்க ளைத்தெளிவாய்
நம்பியுல கோரறிய நாட்டு
ஊற்று நீரை அருந்துவதால் பித்தமும் தாகமும் நீங்கும் என்கிறார் தேரையர்.
பாறைநீர்
பாறைமீ தூறுகின்ற பானீயந் தன்னையுண்டால்
ஏறுமுடலமெல்லா மீரிப்பே - வீறுகின்ற
வாதகோபத் துடனே பாறாச்சுரமுமெழும்
ஓதசனத் துண்டா முவர்ப்பு.
நீர்க்க டுப்பெழு நெஞ்சினிற் சீழ்க்கட்டும்
பார்க்கிற் பித்தம் பலபிணி சூழ்வதாந்
தீர்க்க வாயுவைத் தீர்த்திடுஞ் சிந்தைநோய்
தாக்குஞ் சிக்கான் றனிப்பாறைத் தோயமே.
கரும்பாறைத் தண்ணீர் கனசோபை வாந்தி
பெரும்பாடு பித்தசுரப் பீடை யருந்தயக்க
நீர்க்கடுப்பு தாகமிவை நீக்கிவைத்த புடுதியழ
கேற்றகவளர்ப் பிக்கு மெய்யை யெண்.
பாறை நீரை மூன்று வகையாக கூறுகிறார். அவை பாறை நீர், சுக்கான் பாறை நீர்
மற்றும் கரும் பாறை நீர் என மூன்று வகைப்படும். சாதாரண பாறை நீரால்
ஈரிப்பு, வாதம், கோபம், சுரம் ஆகியவை உண்டாகுமாம். சுக்கான் பாறை நீரை
அருந்துவதால் நீர்க்கடுப்பு, நெஞ்சிற் சீழ்க்கட்டு, பலபிணி, பித்தமும்
உண்டாகுமாம்.
இந்த மூன்று வகைகளில் அருந்துவதற்கு சிறப்பானது கரும்பாறை நீர் என்கிறார்.
இந்த நீரை அருந்துபவர்களுக்கு சோபை, வாந்தி, பெரும்பாடு, பித்தசுரம்,
மயக்கம், நீர்க்கடுப்பு, தாகமும் போவதுடன் புத்தி விருத்தியும், மேனி
அழகும் உண்டாகுமாம்.
அருவிநீர்
அருவிநீரின் மேகம் கற்றுஞ்சி லேக்ஷ்மம்
வருவிக்கும் ரத்தபித்தமாற்றும் - பெருமிதமாம்
வேலை யுலகின் மிகுந்தபல முண்டாக்குங்
காலை மலர்முகத்தாய் காண்.
அருவி நீரை அருந்துவதால் மேகம், ரத்தபித்தமும் நீங்குவதுடன், சிலேட்டுமமும் பலமும் உண்டாகுமாம்.
அடவிநீர்
அடவிப் புனலா லதிசீதா திக்கம்
இடலிற கனைப்பிளைப்பு முண்டாம் - உடல்வயிறு
நாவிவ் விடம்வெதும்பு நண்ணுந் தலைப்பாரந்
தீவவ்வ டற்சுரமாந்தேர்.
அடவி நீரை அருந்துவதால் சலதோசமும், உடல் கனப்பும், இளைப்பும், தலை பாரமும், சுரமும், உடல்,வயிறு ஆகிய இடங்களில் அனலும் உண்டாகும் என்கிறார்.
வயல்நீர்
மேகம்போந் தாகம்போம் வெட்டையுட னேசுரம்போந்
தேகங் குளிர்ச்சியுற்றுத் தேறுங்காண் - சோகமெல்லாம்
ஆறு மிரத்தகய மாறுநோய்க் கோபமிக
மாறும் வயற்புனக்கு வை.
வயல் நீரை அருந்துவதால் மேகம், தாகம், வெட்டை, சுரம், இரத்தகயம், கோபம், சோபமும் போகும்.அத்துடன் உடலில் குளிர்ச்சியும் உண்டாகுமாம்.
நண்டுக்குழி நீர்
வாந்தியறுந் தாகமது மாறாத விக்கலறுங்
காந்த லெரிவுங் கடிதேகுந் தோய்ந்துவருங்
கண்டுக் குயர்ந்த கனிமொழியே பன்னாளு
நண்டுக் குழிநீரை நாடு.
வாந்தி, தாகம், மாறாத விக்கல், காந்தல், தேக எரிவு ஆகியவை நீங்க வேண்டும்
என்று விரும்புபவர்கள், நண்டுக் குழிநீரை தேடி அருந்த வேண்டும் என்கிறார்.